Sunday, June 24, 2012

ஹிந்து தர்மத்தில் ஷஷ்டியப்த பூர்த்தி


ஹிந்து தர்மத்தில் ஷஷ்டியப்த பூர்த்தி – சி.கே.நரசிம்மாச்சாரி,மதுரை.


உலக நாடுகளிலெல்லாம் நம் பாரத நாட்டிற்கு ஓர் ஏற்றம் உண்டு. நம் ஜனத்தொகைக்காகவோ, தொழில் வளத்திற்காகவோ, செல்வச் செழிப்பிற்காகவோ அல்ல அது. தெய்வீகமும், ஆன்மீகமும் நின்று நிலவும் யோகபூமி என்பது தான் இதன் பெருமை. அணுகுண்டு, சந்திர மண்டல சஞ்சாரம் முதலிய விஞ்ஞானத்திற்கெல்லாம் மேலான ஒரு மெய்ஞானம் இங்கு தான் கிடைக்கும். மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து, மனநிறைவுடன் ஜீவன் முக்தியடைய நிச்சயமான வழிகளை ஹிந்து தேச மஹரிஷிகள் தான் உலகிற்கு காட்டியுள்ளார்கள்.
     மேல் நாடுகளில் நாகரீகமே என்னவென்று தெரியாதிருந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் நாலந்தா, தக்ஷசீலா ஆகிய சமய சர்வ கலாசாலைகளை நடத்தி ஞாலமனைத்திற்கும் ஞான குருவாக விளங்கினோம். இன்று மத்திய அரசினால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண எனும் விருதுகள் அக்காலத்தில் அந்த சர்வகலாசாலைகள் மாணவர்க்கு வழங்கிய பட்டங்கள் தான்.
     செல்வத்திலும் செருக்கிலும் ஓடி ஆடி ஓய்ந்துவிட்டு, இறுதியில் மன நிம்மதி வேண்டிய மேல்நாட்டார் யாவரும், நம் பாரத நாட்டை சரணடைந்து நம் ஹிந்து சாஸ்திரங்கள் போதிக்கும் அறவழிகளப் பின்பற்றி பயனடைந்து வருகிறார்கள். நாமோ, நம் பெருமை தெரியாமல் இன்று வீண் ஆடம்பரங்களை அந்தஸ்து, சுகம் எனத் தவறாகக் கருதி நம் வாழ்க்கையை பலர் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சிகளால் பயன்களை விட கலாசார சீரழிவு தான் அதிகம்.
நால் வகை வாழ்வு நிலைகள்:
     ஒரு மனிதன் வாழ்நாட்களை நான்கு வகையான் நெறிகளாக (ஆஸ்ரம தர்மங்களாக) நமது சாஸ்திரங்கள் முறைப் படுத்தியுள்ளன. பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாஸம் என்பவைகள் தான் அவை.
பிரம்மச்சரியம்:
பிரம்மச்சரியம் என்றால் உயர்நெறிப்படுதல் என்பது பொருள். இல்லறத் துணைவியை ஏற்று வாழ்க்கை நடத்தும் பக்குவம் அடையும் வரை அனுஷ்டிக்க வேண்டிய வாழ்வுமுறை பிரம்மச்சரியம் எனப்படும். நல்வாழ்வை நல்கும் கல்வியை கற்றலும், ஒழுக்கப் பண்பாடுகளை நம்மில் வளர்த்தலும், ஆரோக்கியமான உடலும் உள்ளமும் திட்டமிட்டு பேணுதலும் ஆகியவையே இந்த அஸ்திவார ஆஸ்ரம தர்மமாகும். இந்நாட்களில் கவனக்குறைவாக இருப்பவர்கள் வாழ்க்கையில் பிற்காலத்தில் நிலச்சுமையாகிவிடுவது திண்ணம்.
Part 2.
கிருஹஸ்தம்:
இரண்டாவது ஆஸ்ரமம் கிருஹஸ்தம்.
க்ருஹ = வீடு, ஸ்த = இருந்துகொண்டு, அதாவது வீட்டு வாழ்க்கையிலிருந்து கொண்டே, பேணும் அறநெறிகள் எனப்படும். திருமணம் முதல் ஷஷ்டியப்த பூர்த்தி வரை வாழும் இந்த நீண்ட காலம், பல் பொறுப்புகளை ஏற்று, பக்குவத்தையும் தகுதியையும் அளிக்கிறது. பொருளீட்டல், நன்மக்களைப் பெறுதல், தர்மத்தை வளர்த்தல், சன்யாசிகளையும், செழுங்கிளைகளையும் தாங்குதல் முதலியன் இந்த ஆஸ்ரம நாட்களில் நாம் செய்யும் கடமைகளாகும். அறுபது ஆண்டு நிறையும் பொழுது, ஒருவன் மக்கட் செல்வத்தையும் பொருட்செல்வத்தையும் அடைந்து முடிந்துவிடுகிறான். பெற்ற மக்களை மணமுடித்து அவர்கள் தம் காலிலே நிற்கும் தகைமையையும் உருவாக்கி அதைக்கண்டு மகிழ்வும் பெறுகிறான்.
வானப்பிரஸ்தம்:
இனி தான் மூன்றாவது ஆஸ்ரமமாகிய வானப்பிரஸ்தம் ஆரம்பமாகிறது. லௌகீகம் எனும் உலகியல்களை படிப்படியாக் குறைத்துக் கொண்டு அருளியலிலும் ஆன்மீகத்திலும் தங்களை முழுமையாக் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நாட்கள் இவை, இதில் மிகத் தேர்ச்சி பெற்றவர்கள் தான் பிறகு நான்காவது ஆஸ்ரமமாகிய சன்யாஸத்தை மேற்கொள்வர்.
மூன்றாவது ஆஸ்ரம நுழைவாயிலில் நிற்கும் ஒரு ஷஷ்டியப்த தம்பதியரை இனி பார்ப்போம்.
1.   போதுமென்ர மனத்தால் பொருட்செல்வர்களாகியிருப்பார்கள்.
2.   மக்கட் செல்வராகி பேரன் பேத்திகளையும் கண்டிருப்பர்.
3.   க்ஷேத்திராடனங்களும், சக்திக்கேற்ப நற்பணிகளும் செய்து புகழ்ச் செல்வர்களுமாகி இருப்பர்.
4.   பட்டறிவாலும், விவேகஞானத்தாலும் துவைக்கப் பெற்று, இனி பிறந்த பயனை அடைய வேண்டுமெனும் அருட்பசி எடுக்கத் தொடங்கியிருக்கும்.

மேலும் நமது தமிழ் (ஸௌரமான) பஞ்சாங்கப்படி 60 ஆண்டுகள் கொண்ட ஒரு கால அளவை, பிரபவ முதல் அக்ஷய முடிய வருடப்பெயர்களுடன் அமைத்து கணித்திருக்கின்றனர். நாம் பூஜைகளுக்காக சங்கல்பம் சொல்லும் பொழுது “ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே, …..(இன்ன) வர்ஷே” என்று சொல்கிறோம். அதாவது பிரபவ வருடம் முதல் தொடங்கும் அறுபது ஆண்டுகளில், இன்ன் ஆண்டு, இன்ன மாதம், இன்ன நக்ஷத்திரம் என்று சங்கல்பத்தில் சொல்கிறோம். ஷஷ்டியப்த பூர்த்தியின் பொழுது நாம் பிறந்த ஆண்டு மறுபடியும் வந்து, அந்த அறுபதாண்டு காலம் நற்குடும்பமாக வாழ்ந்த பெருமைகளையும் நாம் நினைவு கூறுகிறோம்.
இந்நிலையில் தான் ஷஷ்டியப்த பூர்த்தி வருகிறது. வாழ்க்கையில், இது ஒரு மைல்கல் எனலாம்.
Part 3.
இனிமேல் பண்பட்ட வாழ்க்கை தான் வாழவேண்டுமென்ற பொறுப்பை உணர்த்தும் நன்னாள். இங்கு நின்று கொண்டு தாங்கள் நடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தையும், மேலே செல்லவிருக்கும் அருட் சாம்ராஜ்ய நெறிகளையும் உற்று நோக்குகின்றனர் வானப்பிரஸ்த தம்பதியர்.
சாதாரண மனிதனாகப் பிறந்து ஒரு நல்ல பாத்திரம் ஆவதற்கு எத்துணை ஆசான்களின், சான்றோர்களின் கருணையும், கிருபையும் தேவைப்பட்டன என்று கணக்குப் போடுகின்றனர். தன்னை ஈன்றெடுத்து வளர்த்த தெய்வங்களாம், தாய் தந்தையரை உள்ளத்தால் சாஷ்டாங்கம் செய்கின்றனர். பள்ளி ஆசிரியர் களையும், தொழிலிலும் இடுக்கண்களிலும் உதவிய நண்பர்களையும், தவறு செய்த பொழுது கண்டித்து திருத்திய குருமார்களையும் பெரியவர்களையும் தவறாமல் ஒவ்வொரு வராக மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தி பயபக்தியுடன் அவர்கட்கு மானஸீகமான பாத பூஜை செய்கின்றனர்.
மனிதன் வாழையடி வாழையான வாழ்க்கைக்காகவும், சந்ததிப்ராப்திக்காகவும், இயற்கை அன்னை அமைத்திருக்கும் நமது உடற்கூறு வினோதங்களைக் கண்டு பிரமிக்கின்றனர். லோக சிருஷ்டிக் கலைஞனான சர்வேச்வரன் மனம், மெய், மொழி ஆகிய திரிகரணங்களால் துதிக்கின்றனர்.
இனி தாங்கள் புனிதப்பயணம் செய்யவிருக்கும் வானபிரஸ்த வாழ்க்கையை திறம்பட நடத்தத் தகுதியான் ஆரோக்கியமான் உடலையும், உள்ளத்தையும் அளிக்குமாறு பரம்பொருளிடம் சரண் புகுகின்றனர். அறிந்தும் அறியாமலும் தாம் இழைத்த தோஷங்களுக்கு பிராயசித்தம் செய்து கொள்கின்றனர். அதற்கான நவகிரஹ சாந்தியாகிறது. ஆயுஷ்ஹோமம் நடக்கிறது. வருணன் முதலிய தேவதைகளை ஆவஹானம் செய்த, கலஸ தீர்த்தத்தால் ஸஹஸ்ர தாரையாக ஜல்லடையால் ஸ்நானம் செய்விக்கப் படுகின்றனர். இனி தம்பதியர் வானப்பிரஸ்தம் செல்லத்தயார்.

Part 4 (final).
இனி என்ன செய்யப் போகிறோம்?
     புனித வாழ்க்கை தொடங்கி விட்டது. பெரியவர்கள் என்று நம்மை வணங்கி நம்மிடம் ஆசி பெறும் அளவிற்கு நம்முடைய வாழ்க்கை புனிதமாகி உயர்ந்துவிட வேண்டும். அதற்கு வைராக்கியத்துடன் சில நியம நிஷ்டைகளை அனுஷ்டித்தாக வேண்டும்.
     1.நம் உடல் சுகபோகத்திற்காக வந்ததல்ல, இது ஒரு ஆன்மா உறையும் க்ஷேத்திரம் என்று உறுதியாக கொள்வாம். எனவே ஒரு திருக்கோவிலைப் போல இதைச் சுத்தமாகவும் புனிதமாகவும் வைத்துக் கொள்வோம்.
     2.நம் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் அன்பும் பண்பும் மிளிர வேண்டும்.
     3.நம் மனம் நமக்கு கட்டுப்படுகிறதா? என்று பரிசோதித்துப் பார்க்க ஆகார, நியமம், உபவாசம், விரதங்கள் முதலியவற்றை மேற்கொள்வோம். மனதை வென்றவர் உலகை சுலபமாக வெல்லமுடியும்.
     4. தொழில் பொறுப்புகள், குடும்ப சடங்குகள் இவைகளை படிப்படியாக மக்களிடம் ஒப்புவித்து விட்டு அவைகளுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டும் நாம் இருந்து கொண்டு அதிக நேரத்தை பூஜைகள், தியானம், சத்ஸங்கம், பொதுநல சேவை இவைகளுக்காக ஒதுக்குவோம். ஏதேனும் ஒரு பொதுப்பணியை விரும்பி ஏற்று தீவிர கர்மயோகத்தில் இறங்குவோம்.
     5.இதுவரை நமது குழந்தைகளிடமும், குடும்பத்தினரிடமும் மட்டும் செலுத்தி வந்த அன்பை இனி உலக்த்து அனைவரிடமும் செலுத்தி ஒரு மஹாத்மா போன்ற பெருநோக்கு கொள்வோம்.
     6. முடிந்தால் சந்யாஸ வாழ்க்கை வேண்டும் எனும் லக்ஷ்யத்தோடு அதற்குத்தக, நமது அன்றாட வாழ்க்கையை எளிமையானதாக், பற்றற்றதாக் அமைத்துக் கொள்வோம்.

     நாம் ஹிந்து தர்மப்படி வாழ்ந்து காட்டிய ஆதர்ச தம்பதிகளான வசிஷ்டர்-அருந்ததி போலவும், அத்ரி-அநசூயை போலவும், அகஸ்தியர்-லோபமுத்ரா போலவும், வாசஸ்பதி மிச்ரர்-பாமதி போலவும் வள்ளுவர்-வாசுகி போலவும், தர்மம் வளர்க்கும் தம்பதிகளாக வாழ்ந்து வழிகாட்டுவோ. நன் முயற்சிகளுக்கு யாண்டும் இறைவன் துணை உண்டு.

     ஷஷ்டியப்த பூர்த்தியின் போது திருமாங்கல்யம் கட்டும் சம்பிரதாயம் எந்த சாஸ்திரத்திலும் இல்லை. விழாவை குதூகலப்படுத்த வேண்டுமென்று சில அதிஉற்சாகிகள் புகுத்திய இடைச் செருகல் ஆகும்.

                  ஓம் தத்ஸத்.
    

Sourashtra Class Room